Tuesday 1 March 2011


அழுக்கு சமுதாயம்

அந்திவானம் மொதுவாக
அழுதுகொண்டிருந்தது!

இரண்டு கம்புகளின் நடுவே
இணைக்கப்பட்ட
கயிற்றின் மேல்
சின்ன மலர் ஒன்று
சித்திரம் வரைந்து கொண்டிருந்தது!

சயிக்கிள் வளையத்துள்
சாகசச் சரித்திரம்
செய்து கொண்டிருந்தது.

கயிற்றின் கீழ் தாய்
தாளத்தோடு,,
கயிற்றின் மேல் மகள்
சோகத்தோடு,,,,,
வயலின் வரப்பைப்போல
நடுவில் வறுமைக்கோடு,,,,
கூட்டம்
கூடி நின்று
ஆட்டம் பார்த்தது

அவ்வப்போது
விரித்திருந்த துண்டில்
விழுந்தன
சில
சில்லறைக் காசுகள்.

கயிற்றில் இருந்து
இறங்கி
கூட்டத்தை நோக்கி
வாட்டத்தோடு
தட்டை நீட்டினாள்
ந்த பிஞ்சு மலர்.

கூடி நின்ற கூட்டத்தில்
பல கால்கள்
பின்னோக்கிச் சென்றன
கைதட்டி ரசித்த
கூட்டம்
கைவிட்டுப் போவதை
அவளால் தாங்கமுடியவில்லை

திடிரென்று
கூட்டத்தின் நடுவில்
ஒருவன் நுழைந்தான்
எச்சில் சோற்றோடு,,,
பழைய தட்டோடு....

நிமிர்ந்து பார்த்தான்
சிறுமியின் தட்டு
சில்லறையின்றி
சிரித்தது

தயக்கம் ஏதும் இன்றி
தன் தட்டைப்
பார்த்தான்
எச்சில் சோறும்
ஏழெட்டு ரூபாயும்
இருந்தது...
ஏழெட்டு சில்லறையயும்
ஏழைச் சிறுமியின்
தட்டில்,,
போட்டுவிட்டு அந்த
பிச்சைக்காரன்
அழகாய் சிரித்தவாறு
அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் சிரிப்பில்
ஆயிரம்
அர்த்தங்கள்
தெரிந்தன என்பதெல்லாம் பொய்!
ஒரே ஒரு
அர்த்தம் தெரிந்தது
"இந்த அழுக்கு சமுதாயம்
எப்போது அழகாகப் போகிறது"

No comments:

Post a Comment